பொதுபோக்குவரத்து நாளை தொடக்கம் அரசு பஸ்களை இயக்குவதற்கு ஆயத்த பணிகள் தீவிரம்

பொதுபோக்குவரத்து நாளை தொடங்குவதையொட்டி தேனி மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்குவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-26 15:14 GMT

தேனி:
கொரோனா வைரஸ் 2-வது அலையாக உருவெடுத்து தமிழ்நாட்டில் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நோய் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்னர், கடந்த மாதம் 22 மற்றும் 23-ந்தேதிகள் மட்டும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. 24-ந்தேதியில் இருந்து மீண்டும் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டத்துக்கு வெளியிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் அன்றாடம் பணிக்கு வந்து செல்வதற்காக மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஆயத்த பணிகள்
தேனி மாவட்டத்தில் சுமார் 380 அரசு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த பஸ்கள் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்த தேனி, திண்டுக்கல் உள்பட 23 மாவட்டங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பஸ்கள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு தொற்று குறைந்த பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதனால், மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை இயக்குவதற்காக ஆயத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 1 மாதத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டு உள்ளதால் பஸ்கள் தூசி படிந்து காணப்பட்டன. பஸ்களில் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணி, பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பஸ்களை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று மும்முரமாக ஈடுபட்டனர்.
50 சதவீத பயணிகள்
பஸ்கள் இயக்கப்படுவது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "100 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. நாளை கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து இருக்காது. தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படும். காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படும். மாவட்டத்தில் வழக்கமான வழித்தடத்தில், வழக்கமான நேரங்களில் பஸ்கள் இயக்கப்படும். மக்கள் சில ஊர்களுக்கு அதிக எண்ணிக்கையில் செல்வதாக இருந்தால் அவர்களுக்காக கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்