முதல்-அமைச்சரின் படம் ஏன் வைக்கவில்லை? என தி.மு.க.வினர் தட்டி கேட்டு தகராறு; 2 பேர் கைது
தமிழக முதல்-அமைச்சரின் படத்தை ஏன் வைக்கவில்லை? என தி.மு.க.வினர் தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதுெதாடர்பாக சங்க இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி
முள்ளண்டிரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் தமிழக முதல்-அமைச்சரின் படத்தை ஏன் வைக்கவில்லை? என தி.மு.க.வினர் தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதுெதாடர்பாக சங்க இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதல்-அமைச்சரின் படம்
ஆரணிைய அடுத்த முள்ளண்டிரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் சங்கர் தலைமையில் கடந்த 24-ந்தேதி சங்க பேரவைக்கூட்டம் நடந்தது. இதில் சங்க துணைத்தலைவர் படவேட்டான், இயக்குனர்கள் வினோத், பிரபு, சுபாஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரின் கணவரான பாலாஜி கூட்டம் நடக்கும்போது உள்ளே சென்று தமிழக முதல்-அமைச்சரின் படத்தை அலுவலகத்தில் ஏன் வைக்கவில்லை? எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பே பாலாஜி, கூட்டுறவு வங்கிக்கு கூடுதலாக தற்காலிக பணியாளர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதுபற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம், எனப் பேசப்பட்டதாக கூறப்படுகிறது
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் ஆரணி தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் பாலாஜி மற்றும் மாவட்ட கவுன்சிலரின் கணவர் குமரேசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கட்சி கொடிகளை ஏந்தி வந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் தமிழக முதல்-அமைச்சரின் படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கோரி புகார் செய்தனர்.
போலீசார் விரைந்து வந்து, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் கலைந்து செல்லுங்கள் எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷாகின் வழக்குப்பதிவு செய்து, சங்க இயக்குனர் பிரபு மற்றும் அங்கு இணையதளத்தின் மூலம் பட்டா நகல் பெற வந்த முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இயக்குனர்கள் வினோத், சுபாஷினி, துணைத் தலைவர் படவேட்டான் ஆகியோரை தேடி வருகின்றனர்.