ரூ.5¾ லட்சம் கையாடல்; மின்வாரிய ஊழியர் பதவி இறக்கம்
ரூ.5¾ லட்சம் கையாடல் செய்த மின்வாரிய ஊழியரை பதவி இறக்கம் செய்து விழுப்புரம் தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை பிரிவு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் வருவாய் மேற்பார்வையாளராக யுவராஜா என்பவர் பணியாற்றினார். இவர் மின்நுகர்வோர் செலுத்திய பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் மின்வாரியத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதோடு முக்கிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இதில் வருவாய் மேற்பார்வையாளர் யுவராஜா, ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 718-ஐ கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவர், தான் கையாடல் செய்த பணத்துடன் அபராத தொகையையும் சேர்த்து மின்வாரியத்திற்கு செலுத்தினார்.
மின்வாரிய ஊழியர் பதவி இறக்கம்
இந்நிலையில் யுவராஜா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவரை வருவாய் மேற்பார்வையாளர் பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்ததோடு 3 ஆண்டு காலத்திற்கு விடுப்பு காலம் நீங்கலாக கணக்கீட்டு ஆய்வாளர் பதவியில் குறைந்தபட்ச ஊதியத்துடன் பணியாற்ற வேண்டும் என்று விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள யுவராஜா தற்போது ஆலம்பூண்டி பிரிவு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.