கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்த பக்தர் உள்பட 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்த பக்தர் உள்பட 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 17.6.2021 அன்று உண்டியலை திருட வந்த நபர்களால் கோவில் ஒப்பந்த நியமனக்காவலர் பாபு என்பவர் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தம்புசெட்டி தெரு நாகப்பச்செட்டி பிள்ளையார் கோவிலில் கடந்த 5.6.2021 அன்று பூட்டியிருந்த கோவிலின் முகப்பில் நின்று சாமி தரிசனம் செய்த திவாகர் என்பவர் கோவில் திருப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் எதிர்பாராதவிதமாக விழுந்து உயிரிழந்தார்.
இந்த துயரச் செய்திகள் குறித்து அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் குடும்பத்தினரை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டதுடன் இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.