வாடகை தகராறில் அ.ம.மு.க. பிரமுகரின் கடை பூட்டை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்றதாக புகார்

சென்னை புளியந்தோப்பு, வாடகை தகராறில் அ.ம.மு.க. பிரமுகரின் கடை பூட்டை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்றதாக புகார்.

Update: 2021-06-26 05:34 GMT
திரு.வி.க. நகர், 

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 39). இவருடைய அண்ணன் நாசர் (46). அ.ம.மு.க. பிரமுகரான இவர், திரு.வி.க. நகர் பகுதி செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதிகளில் டீ கடை, டிபன் கடை, பேக்கரி கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு புளியந்தோப்பு போலீஸ் நிலையம் அருகில் டீ கடையுடன் கூடிய ஓட்டல் உள்ளது. இந்த கடைக்கு கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடையின் உரிமையாளர் சுரேஷ் சிங், வாடகை தராததால் கடையை காலி செய்யுமாறு கூறினார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ரூ.9,500 பணத்தை சுரேஷ் சிங் எடுத்துச்சென்று விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி புளியந்தோப்பு துணை கமிஷனரிடம் சம்சுதீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்