ஏ.சி. பழுதானதால் வீட்டு வளாகத்தில் குடும்பத்தினர் படுத்து உறங்கினர்: நள்ளிரவில் வீடு புகுந்து 1 0 பவுன் நகை-1கிலோ வெள்ளி கொள்ளை

ஏ.சி. பழுதானதால் வளாகத்தில் குடும்பத்தினர் படுத்து உறங்கியதால் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 10 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-06-26 04:56 GMT
பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 37). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது மனைவி கனிமொழி, மகள் ரக்சனா, மகன் முகுந்தகுமார் ஆகியோருடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டு வளாகத்தில் படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் படுக்கை அறைகளில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த சங்கிலி, நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகளும், சுமார் 1 கிலோ எடையுள்ள கொலுசு உள்ளிட்ட வெள்ளி நகைகளும், ரூ.16 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், கொள்ளையர்கள் திருடிச் செல்லும் அவசரத்தில் 2 குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளி கிண்ணங்களை மெத்தை மீது போட்டுவிட்டு சென்றிருந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பிரபாகரன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், வீட்டில் ஏ.சி. பழுதானதால் பிரபாகரன் குடும்பத்தினருடன் வீட்டு வளாகத்தில் படுத்து தூங்குவதை அறிந்த மர்ம நபர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் கைவரிசை காட்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள மேட்டுகாலனியில் வசித்து வருபவர் விஜயசாரதி (44). ஒப்பந்ததாரர். நேற்று முன்தினம் இரவு இவரும், இவரது குடும்பத்தினரும் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்கு இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 2 கிராம் தங்க நகை, கொலுசு மற்றும் 15 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்