அரசு செட்டாப் பாக்ஸ்களை வழங்க மறுக்கும் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து மாவட்ட கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.
திருவள்ளூர்,
தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கேபிள் டி.வி. சேவையை தனியார் நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இதில் பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. மாதாந்திர சந்தா ரூ.140 என்ற வீதத்தில் (18 சதவீத ஜி.எஸ்.டி. நீங்களாக) பொதுமக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டி.வி.சேவை எந்த விதத்திலும் தடைப்படாமல் நடைபெறு வரும் நிலையில், சில தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை அரசு செட்டாப் பாக்ஸ் என்ற தவறான தகவல்களை கூறி தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றது.
ஆகையால் பொதுமக்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸ்களை தவறான தகவல்களை நம்பி வாங்க வேண்டாம். இவ்வாறு அரசு செட்டாப் பாக்ஸ்களை வழங்க மறுக்கும் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்துசெய்ய பரிந்துரை செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி. தொடர்பான புகார்களை தொலைபேசி 044-27665551-ல் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.