மதுரையில் ‘டெல்டா பிளஸ்’ வைரசுக்கு வாலிபர் பலி
மதுரையில் டெல்டா பிளஸ் வைரசுக்கு வாலிபர் பலியானார். புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
மதுரை,
மதுரையில் டெல்டா பிளஸ் வைரசுக்கு வாலிபர் பலியானார். புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாதிப்பு குறைகிறது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. மதுரையில் நேற்று புதிதாக 104 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 894 ஆக உள்ளது. இது போல் நேற்று புதிதாக 112 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 197 ஆக உள்ளது.
உயிரிழப்பு
மதுரையில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 619 இருக்கிறது. இவர்களுக்கு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களும் கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டெல்டா பிளஸ் வைரசுக்கு வாலிபர் பலி
இறந்தவர் மதுரையை சேர்ந்த 34 வயது வாலிபர் ஆவார். அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. இந்தநிலையில் அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்தபோது அதில் டெல்டா பிளஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் யாருக்காவது டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சமும் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. தற்போதுதான் கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்துள்ள நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் மதுரை மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.