ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 597 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 597 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.;

Update:2021-06-26 02:52 IST
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 597 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
597 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் 2 -வது இடத்தில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 698 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 597 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 110 ஆக உயர்ந்தது.
ஒருவர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 56 வயது ஆண் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 23-ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அன்றே அவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 566 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 865 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 81 ஆயிரத்து 849 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 4 ஆயிரத்து 695 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மயிலம்பாடி
பவானி அருகே உள்ள மயிலம்பாடி ஊராட்சிக்கு உள்பட்டது கல்வாநாயக்கனூர், காத்தாம்பாளையம். இதில் கல்வாநாயக்கனூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 85 பேருக்கும், காத்தாம்பாளையம் பகுதியில் 15 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மயிலம்பாடி ஊராட்சியை சேர்ந்த போத்தநாய்க்கனார் என்ற பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு திடீரென காய்ச்சல், தலைவலி ஏற்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் இந்தப் பகுதியில் மீண்டும் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் ஒரே பகுதியில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து இவர்கள் கோபி மற்றும் அந்தியூர் பகுதியில் உள்ள சிறப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை ஜம்பை வட்டார கிராம சுகாதார மருத்துவ அலுவலர் தனலட்சுமி தலைமையில் மயிலம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் கோமதி, பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, துணை வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் லதா, சுகாதார ஆய்வாளர் சதீஷ், மயிலம்பாடி ஊராட்சி மன்ற செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்