வெள்ளித்திருப்பூர், சேவாகவுண்டனூர் பகுதியில் வாகன சோதனை: கர்நாடக மது விற்ற 3 பேர் கைது
வெள்ளித்திருப்பூர், சேவாகவுண்டனூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
வெள்ளித்திருப்பூர், சேவாகவுண்டனூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் கர்நாடக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் தொட்டி கிணறு சோதனைச்சாவடியில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடம் 66 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மல்லிகுட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 34) என்பதும், இவர் வெளிமாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 66 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரிடம் இருந்து போலீசார் 77 கர்நாடக மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன் (25), அதே பகுதியை சேர்ந்த குமார் (23) என்பதும், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரையும் வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கவுந்தப்பாடி புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரின் மகன் சக்திவேல் (வயது 46) என்பதும், அவர் சட்டவிரோதமாக 48 மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதேபோல் சேவாக்கவுண்டனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது சேலம் மாவட்டம், கொளத்தூர் காந்திநகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் கார்த்தி என்பவர், சட்ட விரோதமாக 96 கர்நாடக மதுபாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.