ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 28-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடக்கம்; கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வருகிற 28-ந்தேதி மாணவர்கள் சேர்க்கை தொடங்குவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வருகிற 28-ந்தேதி மாணவர்கள் சேர்க்கை தொடங்குவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
அரசு இசைப்பள்ளி
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டு துறையின் கீழ் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வருகிற 28-ந்தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்குகிறது. ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் என 7 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு சேர்க்கைபெற குறைந்த பட்சம் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பாடங்களுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதுமானது. ஆண்டுக்கு ரூ.150 பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டும்.
மாணவர் சேர்க்கை
அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.400 வழங்கப்படும். அரசு பஸ்களில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவச பயணச் சலுகை பெறலாம். 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பாகும். தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கி படிக்க வழிவகை செய்து கொடுக்கப்படும்.
இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் மேலும் தகவலுக்கு, தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம், பவானி ரோடு ஈரோடு-05 என்ற முகவரியிலும், 0424-2294365, 94435 32934 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.