கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-25 20:49 GMT

கிருஷ்ணகிரி:

வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி பகுதியில், ரேஷன் பொருட்களை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி ஆகியோர் நேற்று மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.
சரக்கு ஆட்டோ பறிமுதல்
போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம், சந்திபுரம், சோளசெட்டலபள்ளி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரா (வயது 26) என்பவர்  கிருஷ்ணகிரிக்கு வந்து, ரேஷன் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஆந்திராவின் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டன் ரேஷன் அரிசி, 250 கிலோ கோதுமையுடன் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்