ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் கிடைக்காததால் மக்கள் அவதி

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-06-25 20:49 GMT
நெல்லை:
தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

2-வது கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கியது. மேலும் இதனுடன் சேர்த்து 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த பொருட்களை தனித்தனியாக வழங்காமல், ஒரே தவணையாக மொத்தமாக பொதுமக்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு 14 வகையான பொருட்கள் முறையாக சென்றடையவில்லை. இதனால் ரேஷன் கடை பணியாளர்களால் ஒரே நேரத்தில் பணமும், நிவாரண பொருட்களும் வழங்க முடியவில்லை, என கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களில் முதலில் ரூ.2 ஆயிரத்தையும், அதை தொடர்ந்து அவ்வப்போது நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இதனால் தினந்தோறும் ரேஷன் கடைகளின் முன்பு பொதுமக்கள் காத்திருந்து அவதிப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நிவாரண பொருட்கள், உதவித்தொகையை ஜூன் மாதம் 25-ந்தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என்ற தகவல் வெளியானது.

இதனால் இதுவரை பணம் மற்றும் நிவாரண பொருட்கள் வாங்காத பொதுமக்கள் அவரவர் ரேஷன் கடைகளில் நேற்று குவிந்தனர். நெல்லை மாநகரில் பல்வேறு ரேஷன் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் சிலருக்கு மட்டுமே பணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒருசில இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘‘14 வகையான பொருட்களில், 1 பொருள் குறைந்தால் கூட ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரமுடியவில்லை. அதனால் அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அரசு உத்தரவுப்படி அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான நிவாரண பொருட்கள் நிச்சயம் வழங்கப்படும்’’ என்றனர்.

மேலும் செய்திகள்