மீன் பிடிக்க சென்ற போது பரிசல் கவிழ்ந்து அணையில் மூழ்கிய மீனவரின் உடல் மீட்பு
மீன் பிடிக்க சென்ற போது பரிசல் கவிழ்ந்து கிருஷ்ணகிரி அணையில் மூழ்கிய மீனவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
மீனவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 46). மீனவர். இவர் கே.ஆர்.பி. அணையில் பரிசலில் சென்று மீன் பிடித்து குத்தகைதாரரிடம் கொடுத்து வந்தார். கடந்த 23-ந் தேதி இரவு அவர் மீன் பிடிக்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் பரிசலில் கே.ஆர்.பி. அணையில் மீன்பிடிக்க சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கோவிந்தம்மாள் கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
உடல் மீட்பு
மேலும் தீயணைப்பு வீரர்கள் மோட்டார் படகு மூலமாக நேற்று முன்தினம் முழுவதும் முனியப்பனை தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சென்ற பரிசல் கவிழ்ந்த நிலையில் கிடைத்தது. இதனால் பரிசல் கவிழ்ந்து அவர் நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற கோணத்தில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவருடைய உடல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக முனிய்பனின் உடலை தேடும் பணி நடந்தது. நேற்று மதியம் 2 மணி அளவில் முனியப்பனின் உடலை அணையில் இருந்து தீயணைப்பு படையினர் மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.