தென்காசி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; ஆட்டோ டிரைவர் கைது

தென்காசி அருகே நேற்று கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-25 20:20 GMT
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி 1-வது வார்டு கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் குழந்தைவேல் என்ற கார்த்திக் (வயது 20). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த உறவினரான பாண்டி மகன் பாஸ்கர் என்ற கருத்தப்பாண்டி (36). ஆட்டோ டிரைவரான இவர் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம், கஞ்சா போன்ற பழக்கவழக்கங்கள் இருந்ததாகவும், இதனை நிறுத்துமாறு கார்த்திக் கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் அவர் கேட்காததால் பாஸ்கரின் பெற்றோரிடம் கார்த்திக் இதுபற்றி கூறினார். உடனே பெற்றோர், பாஸ்கரை கண்டித்தனர். இந்தநிலையில் பாஸ்கர் நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு கோவிலில் சேதமடைந்த உண்டியலை கார்த்திக் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஸ்கர், என்னை பற்றி எப்படி என் பெற்றோரிடம் குறை கூறலாம் எனக்கூறி கார்த்திக்கிடம் வாக்குவாதம் செய்தார்.

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த பாஸ்கர், தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கார்த்திகை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பாஸ்கர் தப்பிச் சென்றார். உடலில் பல இடங்களில் பயங்கர வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆய்க்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாஸ்கரை தேடி வந்தனர். அப்போது ஆய்க்குடியில் ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பாஸ்கரை கைது செய்தனர்.

கடந்த 19-ந் தேதி இதே பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் புரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தநிலையில் நேற்று கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்