பெண் தற்கொலை வழக்கில் திருப்பம்- கள்ளக்காதலன் குறைவான விஷம் குடித்ததால் உயிர் தப்பியது அம்பலம்

விஜயாப்புராவில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் கள்ளக்காதலன் மட்டும் குறைவான விஷத்தை குடித்துவிட்டு உயிர் தப்பியது அம்பலமாகி உள்ளது. ஆனால் அவரது கள்ளக்காதலி உயிர் இழந்திருந்தார்.;

Update: 2021-06-25 20:15 GMT
பெங்களூரு:

கள்ளத்தொடர்பு

  விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா கங்கூரு கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா(வயது 36). அதே தாலுகா டி.பிதரகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ்(40). இவர், மாடுகள் விற்கும் புரோக்கர் வேலை செய்கிறார். பசவராஜ் மற்றும் ரேணுகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், மாடுகள் வாங்க சென்ற போது ரேணுகாவுடன் பசவராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

  இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹடலகேரி கிராமத்தில் வைத்து பசவராஜ் மடியில் படுத்திருந்தபடி விஷம் குடித்துவிட்டு ரேணுகா தற்கொலை செய்திருந்தார். கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், கள்ளக்காதலன் மடியில் படுத்தபடியே அவர் உயிரை விட்டதாகவும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ரேணுகாவின் முகத்தில் காயங்கள் இருந்ததால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி முத்தேபிகால் போலீஸ் நிலையத்தில், சகோதரர் லக்கப்பா புகார் அளித்திருந்தார்.

குறைவான விஷம் குடித்ததால்...

  அதன்பேரில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் பசவராஜை பிடித்து விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தது. அதாவது பசவராஜிக்கும், ரேணுகாவுக்கும் இருக்கும் கள்ளத்தொடர்பு 2 பேரின் வீட்டுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் பசவராஜிக்கு தற்கொலை செய்ய விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் முதலில் மதுஅருந்தி உள்ளார். பின்னர் ரேணுகா விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

  அவர் அளவுக்கு அதிகமான விஷத்தை குடித்துள்ளார். ஆனால் பசவராஜ் மதுவில் குறைவான அளவே விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதனால் அவரது உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அளவுக்கு அதிகமாக விஷம் குடித்ததால் பசவராஜ் மடியில் படுத்தபடியே ரேணுகா உயிர் இழந்திருந்தார். இதனை ஆடுமேய்ப்பவர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பசவராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்