டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மரபணு பரிசோதனை
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் கர்நாடகத்தில் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. மைசூரு, பெங்களூருவில் தலா ஒருவர் என 2 பேருக்கு அந்த டெல்டா பிளஸ் வைரசின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 2 பேருக்கும் லேசான பாதிப்பு உள்ளது. மைசூருவை சேர்ந்தவர் முழுமையாக குணம் அடைந்துள்ளார்.
டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் பாதிப்பு தீவிரமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் அந்த நோய் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. உருமாற்றம் அடைந்த வைரஸ்களை கண்டுபிடிக்க தினமும் மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. அந்த மாநிலத்தின் எல்லை நமது மாநிலத்துடன் இணைந்துள்ளதால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதே போல் மராட்டிய மாநிலத்துடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநிலத்தின் எல்லை பகுதியில் அதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதை நாங்கள் செய்கிறோம்.
இதுகுறித்து மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு தகுந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். அண்டை மாநிலங்களுடனான எல்லையை முழுமையாக மூடுவது சரியானதாக இருக்காது. பஸ், ரெயில் நிலையங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சில வேறுபாடுகள்
பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா, உப்பள்ளி, மங்களூரு, விஜயாப்புரா ஆகிய 6 இடங்களில் கொரோனா வைரஸ் மரபணு பரிசோதனை கூடங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். டெல்டா, டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சில வேறுபாடுகள் உள்ளன. இதுகுறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.