குமரியில் இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி போராட்டம்
குமரி மாவட்டத்தில் கோவில்களை திறந்து பக்தர்களை அனுமதிக்கக்கோரி இந்து முன்னணியினர் 42 இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோவில்களை திறந்து பக்தர்களை அனுமதிக்கக்கோரி இந்து முன்னணியினர் 42 இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம்
கொரோனா தொற்று காலத்தில் நோய் பரவாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வசதியாக தமிழகத்தில் கோவில்களை திறந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன்பு நேற்று சூடம் ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 42 இடங்களில் இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவில், குமாரகோவில் குமாரசாமி கோவில் ஆகிய கோவில்கள் முன்பு நடந்த போராட்டத்துக்கு இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன் மற்றும் நிர்வாகிகள், இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கோஷம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில் முன்பு நடந்த போராட்டத்தில் பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த போராட்டத்தில் இந்து முன்னணி நகர தலைவர் மகாராஜா, தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு நடந்த போராட்டத்தில் இந்து முன்னணி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் ராஜேஷ், மாவட்ட துணைத்தலைவர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோவிலை திறந்து பக்தர்களை அனுமதிக்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள்.