தர்மபுரியில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரியில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-25 19:04 GMT
தர்மபுரி,

தர்மபுரி பிடமனேரி மாந்தோப்பு கோவிந்ததாஸ் நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி தேவி கருமாரி (வயது 37). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தேவி கருமாரி தர்மபுரி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாக தர்மபுரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் தனிப்பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பெண் போலீஸ் ஏட்டு தேவி கருமாரி உடல்நிலை சரியில்லாமல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது வெளியே சென்று இருந்த சிவகுமார் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தேவி கருமாரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவி கருமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்