கடனை செலுத்தக் கோரி தனியார் நிதி நிறுவனங்கள் நெருக்கடி

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் ஏற்கனவே விவசாய தேவைக்காக டிராக்டர் வாங்கிய கடனை உடனடியாக செலுத்தும்படி தனியார் நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதாக கூறி காரைக்குடி அருகே டிராக்டர்களுடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-25 19:00 GMT
காரைக்குடி,ஜூன்
கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் ஏற்கனவே விவசாய தேவைக்காக டிராக்டர் வாங்கிய கடனை உடனடியாக செலுத்தும்படி தனியார் நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதாக கூறி காரைக்குடி அருகே டிராக்டர்களுடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிராக்டர்களுடன் போராட்டம்
காரைக்குடியை சுற்றியுள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான், புதுவயல், சாக்கோட்டை, குன்றக்குடி, நேமம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் பருவ மழை தவறாமல் பெய்து கண்மாய்கள் நிரம்பினால் மட்டும்தான் இந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. 
இது தவிர சில விவசாயிகள் போர்வெல் மூலமும், சில விவசாயிகள் கிணற்று பாசனத்தை நம்பியும் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய தேவைக்காக டிராக்டர் மற்றும் விவசாய உபகரண பொருட்களை தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வாங்கியிருந்தனர். மாதந்தோறும் அவர்கள் கடன் தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
டிராக்டர்களுடன் திரண்டனர்
ஆனால் அவர்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தி வருவதாகவும், தவறும் பட்சத்தில் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு தாங்கள் கடனுக்கு வாங்கிய டிராக்டர்களை காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இருப்பினும் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் வாங்கிய டிராக்டரை ஓட்டி வந்து சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அங்கேயே போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து சாக்கோட்டை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவன அதிகாரிகளிடம் பேசி, கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். 
இதையடுத்து போராட்டம் நடத்த வந்த விவசாயிகள் டிராக்டருடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்