தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மருத்துவ கழிவுகளை சேகரிக்க புதிய திட்டம் அறிமுகம்
கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மருத்துவ கழிவுகளை சேகரிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
கோவை
கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மருத்துவ கழிவுகளை சேகரிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதுபோன்று வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது.
கடந்த மாதம் கோவை மாநகர பகுதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன.
தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தம் 456 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளன.
மேலும் மாநகராட்சியில் 313 ஆக அதன் எண்ணிக்கை சரிந்து உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகரம்
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தப்பட்டதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கோவை மாநகர பகுதியில் 313 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. பொள்ளாட்சி நகராட்சியில் எதுவும் இல்லை.
வால்பாறையில்-1, மேட்டுப்பாளையத்தில்-3, சூலூரில்-27 இடங்களும் உள்ளன. மேலும் துடியலூரில்-10, காரமடை-13, மதுக்கரையில்-27, பொள்ளாச்சி வடக்கு-6, ஆனைமலை-12, தொண்டாமுத்தூர்-18, அன்னூர்-5, கிணத்துக்கடவு-2, பொள்ளாச்சி தெற்கு-11, எஸ்.எஸ். குளம்-6, சுல்தான்பேட்டை-2 ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
புதிய திட்டம் அறிமுகம்
கோவை மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை சேகரிக்க மண்டலத்திற்கு 1 வாகனம் வீதம் 5 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் பயன்படுத்ததும் மருத்துவ கழிவுகளை சேகரிக்க மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சள் பை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மாநகராட்சி சார்பில் இந்த மஞ்சள் நிற பைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
மருத்துவ கழிவுகள்
இந்த பைகளில் அவர்கள் பயன்படுத்தும் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை போட்டு வைப்பார்கள்.
இந்த கழிவுகளை அதற்கன நியமிக்கப்பட்டு உள்ள தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு உடை அணிந்து சென்று சேகரிப்பார்கள். இதனால் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.