திருச்சி போலீஸ் நிலையம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு
திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து காப்பாற்றினர்.
திருச்சி,
திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து காப்பாற்றினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
குடும்ப பிரச்சினை
திருச்சி பெரியமிளகுபாறை காமராஜ் மன்ற தெருவை சேர்ந்தவர் லூயிஸ்ராஜ். இவரது மகன் சந்தியாகப்பர் (வயது 35). இவர் அந்த பகுதியில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கும், இவரது அத்ைத (தந்தையின் சகோதரி) மார்க்ரெட் (53) என்பவருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில் சந்தியாகப்பர் தனது கூரை வீட்டிற்கு ஆஸ்பெட்டாஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதற்கு மார்க்ரெட் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீங்கள் வசிக்கும் இடம் எனக்கு சொந்தமானதாகும், இந்த இடத்தில் யாரும் புதிதாக வீடு கட்டவோ, வீட்டை பராமரிக்கவோ கூடாது என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை சந்தியாகப்பர் தனது குடும்பத்துடன் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பரபரப்பு
இதனை பார்த்த போலீசார் அவரிடம் இருந்த கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.