இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஊட்டி,
கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் கோவில்களை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஊட்டி மாரியம்மன் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்களை பக்தர்கள் வழிபாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
வலியுறுத்தல்
இதேபோல் கோத்தகிரி டானிங்டன் விநாயகர் மற்றும் கருமாரியம்மன் கோவில், கடைவீதி விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது கோவில்களை திறந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றப்பட்டது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.