பாகன் தாக்கியதால் வளர்ப்பு யானை கண்ணில் பலத்த காயம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் பாகன் தாக்கியதால் வளர்ப்பு யானை கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2021-06-25 17:43 GMT
கூடலூர்,

முதுமலை புலிகள் காப்பகத்தில் பாகன் தாக்கியதால் வளர்ப்பு யானை கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

வளர்ப்பு யானைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் ஜம்பு, வசிம், முதுமலை, வில்சன், மசினி, சேரன் உள்பட 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்டுவது, வனப்பகுதியில் ரோந்து செல்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. வளர்ப்பு யானைகளை பராமரிக்க பாகன்கள் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

கண்ணில் பலத்த காயம்

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 35 வயதான சேரன் என்ற வளர்ப்பு யானையின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் பாகன் முருகன் என்பவர் தாக்கியதால், யானையின் கண்ணில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் யானையை தாக்கி காயப்படுத்திய பாகன் முருகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

துறை ரீதியான நடவடிக்கை

இது தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறியதாவது:- முதுமலையில் உள்ள சேரன் என்ற வளர்ப்பு யானை வனத்துறைக்கு மிகுந்த உதவியாக உள்ளது. அந்த யானையை கடந்த மே மாதம் 17-ந் தேதி மாயார் ஆற்றுக்கு குளிக்க பாகன் முருகன் அழைத்து சென்றார். அப்போது யானையை தாக்கியதில் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. 

இதுகுறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. யானைக்கு சிறப்பு டாக்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பாகன் முருகன் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்