ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

ஊட்டியில் சம்பளம் வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.;

Update: 2021-06-25 17:39 GMT
ஊட்டி,

ஊட்டியில் சம்பளம் வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்கள்

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுவதுடன் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

இந்த பணிகளில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண காலநிலையில் காலையில் வந்து முக்கிய சாலைகளில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைநிறுத்தம்

இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இந்த மாதம் முடியும் நிலையில், கடந்த மாதத்திற்கான சம்பளம் வழங்காததால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இருப்பினும் உரிய தீர்வு கிடைக்காததால் சம்பளம் வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று பணிக்காக நகராட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகளில் தூய்மை பணிகளில் ஈடுபடவில்லை. இதனால் வார்டுகளில் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

சம்பளம் வழங்க வேண்டும்

இதைத்தொடர்ந்து நிரந்தர பணியாளர்கள் பிரித்து அனுப்பப்பட்டு குப்பைகள் தேங்காமல் இருக்க வாகனங்கள் மூலம் சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து ஒப்பந்த பணியாளர்கள் கூறும்போது, 

ஒப்பந்த பணியாளர்கள் 170 பேருக்கு கடந்த மாத சம்பளம் மற்றும் இந்த மாத சம்பளம் குறித்த தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலைநிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்