தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
மது கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
கிணத்துக்கடவு
மது கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
தமிழக-கேரள எல்லை பகுதி அருகே கிணத்துக்கடவு உள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுபிரியர்கள் அந்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதன்படி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மதுபிரியர்கள் கேரளாவுக்கு சென்று மது அருந்தி வருகின்றனர். மேலும் சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் தீவிர சோதனை
இதனையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் மதுகடத்தலை தடுக்க தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கேரளாவில் இருந்து வரும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.
மேலும் தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள கிராம பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கிராமப்பகுதிகளில் மதுபாட்டில்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.