பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலைகளில் தீ விபத்து
பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
தென்னைநார் தொழிற்சாலை
பொள்ளாச்சி அருகே காளியாபுரத்தில் இருந்து பொன்னாலம்மன் துறை செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் தொழிலாளர்கள் தென்னை நாரை வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று தென்னை நார் தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென எரிய தொடங்கியது.
இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
மின் ஓயர்கள் உரசியதால்....
பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வாகனத்தில் தண்ணீர் தீர்ந்ததால் லாரியில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தென்னைநார், எந்திரங்கள் உள்பட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மின்சார ஒயரில் காகம் அமர்ந்ததால், திடீரென ஓயர்கள் உரசியுள்ளது. இதில் ஏற்பட்ட தீப்பொறி பறந்து வந்து, தென்னைநாரில் விழுந்து தீப்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று நாட்டுக்கல்பாளையத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.