பாகுபலி யானையை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை மேட்டுப்பாளையம் வந்தது.
பாகுபலி யானையை பிடிக்க மேலும் ஒரு கும்கி யானை மேட்டுப்பாளையம் வந்தது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் கூட்டத்துடன் சேராமல் பாகுபலி என்ற யானை தனியாக சுற்றி வருகிறது. இந்த யானையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும், தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்டறிய யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாகுபலி யானையை பிடிக்க டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று மேலும் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வெங்கடேஷ் என்ற கும்கி யானை மேட்டுப்பாளையத்திற்கு வந்தது.
நீண்ட தூரம் பயணம் செய்து வந்த கும்கி யானை வெங்கடேஷ் உடல் வெப்பத்தை தணித்துக்கொள்ள அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து தண்ணீரை தும்பிக்கையால் தனது உடல் மீது பீச்சியடித்தது. அதன் பின்னர் யானைக்கு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்டது. பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கு அதன் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.