சாதிச்சான்று இல்லாததால் சேர்க்கைக்கு மறுப்பு: பள்ளி மாணவிகள் சாலை மறியல் விழுப்புரத்தில் பரபரப்பு

சாதிச்சான்று இல்லாததால் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிப்பதை கண்டித்து விழுப்புரத்தில் பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-25 17:29 GMT
விழுப்புரம், 

சாதிச்சான்று

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த இந்து மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் விழுப்புரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்து வந்தனர். இவர்களில் 28 மாணவ-மாணவிகள் சாதிச்சான்று கேட்டு கடந்த 2015-ம் ஆண்டில் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதில் 15 பேருக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டது. மீதமுள்ள 13 மாணவ- மாணவிகளுக்கு இதுநாள் வரை சாதிச்சான்று வழங்கப்படவில்லை.
இதுசம்பந்தமாக அந்த மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பலமுறை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோல் கோட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களில் தர்ணா போராட்டம், முற்றுகை போராட்டம், குடியேறும் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அவர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் கடந்த ஆண்டு 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு முடித்த மாணவிகள் 7 பேர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இருந்து விலகி இந்த ஆண்டு விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 9, 10-ம் வகுப்புகளில் சேர முடிவு செய்து அதற்காக நேற்று மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆனால் அந்த விண்ணப்பத்துடன் சாதிச்சான்றை வழங்காததால் அவர்களை பள்ளியில் சேர்க்கை செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகள், தங்களுக்கு சாதிச்சான்று வழங்காத கோட்டாட்சியரை கண்டித்து காலை 10.30 மணியளவில் பள்ளியின் முன்பு கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். உடனே பள்ளி ஆசிரியர்கள் அங்கு விரைந்து சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

சாலை மறியல் 

அதன் பின்னர் அந்த மாணவிகள், விழுப்புரம் காந்தி சிலை அருகில் காலை 11 மணியளவில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு சாதிச்சான்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்களை சேர்க்கை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியில் சேர்க்கை செய்யவும், சாதிச்சான்று கிடைக்கவும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன் பின்னர் மாணவிகள், மறியலை கைவிட்டனர்.

சேர்க்கை செய்ய ஏற்பாடு

அதனை தொடர்ந்து அந்த மாணவிகளுக்கு, விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சாதிச்சான்று சம்பந்தமாக மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிடவும் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த மறியல் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்