திட்டக்குடி அருகே திருமணநாளை கொண்டாடிய விவசாயி மர்மச் சாவு போலீஸ் விசாரணை
திட்டக்குடி அருகே திருமணநாளை கொண்டாடிய விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி,
திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாசு மகன் முருகன் (வயது 38). விவசாயி. இவரது மனைவி காவேரி. 11 வயது, 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்களது 15-வது திருமண நாள் ஆகும். இதை கொண்டாடிவிட்டு, இரவு 7 மணிக்கு தனது வீட்டு மொட்டை மாடியில் முருகன் தூங்கினார்.
இரவு 11 மணியளவில், காவேரி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கணவர் முருகனை எழுப்பி பார்த்தார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.
இதுபற்றி அறிந்த முருகனின் அண்ணன் சுப்பிரமணியன் அங்கு வந்து பார்த்த போது, முருகன் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
மர்மச்சாவு
இதுகுறித்து சுப்பிரமணியன் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது தம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே முருகனின் சாவுக்கான காரணம் குறித்து உண்மை நிலை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விவசாயி ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.