கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கிடையில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களையும் திறந்து வழிபாட்டிற்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணியினர் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், நகர பொறுப்பாளர்கள் செந்தில், சதீஷ் குமார், நிர்வாகிகள் கோபிநாத், தியாகு, இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பண்ருட்டி
பண்ருட்டியில் இந்து முன்னணி சார்பில் காந்தி ரோட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் முன்பு கோவில்களை திறக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் என்கிற ஹரிதாஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வீர வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் அன்னையர் முன்னணி தனலட்சுமி, நகர செயலாளர் சுரேஷ், சண்முகம், ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவரும் கோவில்களை திறக்க, அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை முத்துகுமார்சாமி கோவில் எதிரே இந்து முன்னணியினர் கோவிலை திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் ராஜன், பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் செல்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இதில் நிர்வாகிகள் மாணிக்கம், பாரதீய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் முருகன், மீனவர் பிரிவு தலைவர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புவனகிரி
புவனகிரியில் உள்ள அங்காளம்மன் கோவில் எதிரே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழக அரசு கோவில்களை திறக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
மங்கலம்பேட்டை
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் சிவன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ராஜூ, குணசேகரன், விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் வரவேற்றார்.
இதில், ராஜசேகர், தட்சிணாமூர்த்தி, செந்தில், நமச்சிவாயம், விக்கி, கார்த்தி, சுந்தர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்க முன் வந்த அரசு, வழிபாட்டுத் தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.