போலீசார் தொடர் நடவடிக்கை: குற்றச்செயல்களில் ஈடுபட்ட 56 பேர் கைது

மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-25 16:43 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி கஞ்சா விற்பனை செய்ததாக குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அய்யப்பன் என்கிற ராஜ், கடலூர் பிள்ளையார்தொட்டி ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் முகமது ஆகிய 3 பேரையும், லாட்டரி வியாபாரிகளான சிதம்பரம் சின்னதுரை, செல்வமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கருங்குழி பன்னீர்செல்வம், ஆபத்தாரணபுரம் வெங்கடேசன், வடலூர் காமராஜ் ஆகியோரையும், மணல் கடத்தியதாக புவனகிரி சிவானந்தம், அருண், ஹரிஹரன், குறிஞ்சிப்பாடி சுகுமார், குமாரக்குடி வெற்றிவேந்தன், ஜோதி ஆகியோரையும், சூதாடி யதாக 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுபாட்டில்கள்

இது தவிர குடிபோதையில் தகராறு செய்ததாக சாலியந்தோப்பு தண்டபாணி என்பவரையும், மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்து, 35 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 413 லிட்டர் சாராயத்தையும், மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்