செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை

அரசு கேபிள் டி வி க்கான செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-06-25 16:25 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

200-க்கும் மேற்பட்ட சேனல்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பாக பொதுமக்களின் நலன் கருதி இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் ரூ.140 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் குறைவான கட்டணத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 
உள்ளுர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சிலர் தங்களது சுய லாபத்திற்காக அரசின் நலத்திட்டத்தை தடுக்கும் வகையில் இனிமேல் அரசு சிக்னல் வராது என்று தவறான தகவலை தெரிவித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி தன்னிச்சையாக மாற்றி தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் வரப்பெறுகிறது.

அச்சப்பட தேவையில்லை

பொதுமக்களோ அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களோ தமிழ் நாடு அரசின் கேபிள்.டி.வி.க்கான சிக்னல் மற்றும் சேவை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்படும். 
மிகக் குறைந்த சந்தா தொகையில் பொதுமக்களுக்கு தரமான சேவையை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மட்டுமே தொடர்ந்து வழங்க இயலும். பிற கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் வழங்க இயலாது. 

புகார் தெரிவிக்கலாம்

எனவே பொதுமக்களின் விருப்பமின்றி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் 9498002597 என்ற துணை மேலாளர் அல்லது தனி வட்டாட்சியர் அலுவலக செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். 
புகார்கள் வந்தால் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்