பாரிமுனை பஸ் நிலையம் அருகே மின் கம்பத்தில் ஏறி நின்ற வாலிபரால் பரபரப்பு

பாரிமுனை பஸ் நிலையம் அருகே மின் கம்பத்தில் ஏறி நின்ற வாலிபரால் பரபரப்பு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2021-06-25 06:24 GMT
சென்னை, 

சென்னை பாரிமுனை பஸ் நிலையம் அருகே நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அரை நிர்வாண கோலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியபடி, கீழே கிடந்த கல்லை எடுத்து அவர்கள் மீது வீசினார். அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டினர்.

இதனால் ஓடி வந்த வாலிபர், திடீரென அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மளமளவென ஏறினார். மின்கம்பத்தில் ஏறி நின்றபடி மீண்டும் பொதுமக்களை பார்த்து திட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், அந்த வாலிபரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் இறங்கவில்லை.

இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த சென்னை ஐகோர்ட்டு தீயணைப்பு நிலைய அதிகாரி தேவேந்திரகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மின் கம்பத்தின் கீழ் வலையை விரித்து, அந்த வாலிபரை பத்திரமாக கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.அவர் தூத்துக்குடி, நெல்லை வட்டார பேச்சு வழக்கில் பேசியதால், அவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். வாலிபரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்