அரசு நிலம் ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
செம்பியத்தில் 150 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை, செம்பியம் பகுதியில் பலரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘தனியார் பலரால் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் நிலத்தில், சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை முறைகேடு செய்து சிலர் பட்டா பெற்றுள்ளனர். அவ்வாறு பட்டா பெற்ற நிலத்தின் பேரில் வங்கியில் சுமார் ரூ.9 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். அந்த கடனை திருப்பிச் செலுத்தாததால், தற்போது அந்த நிலம் ஏலத்திற்கு வந்துள்ளது. எனவே, அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடங்களை இடித்து அரசுடைமையாக்க வேண்டும்’’ என்று மனுதாரர் தேவராஜன் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலம் மற்றும் நீர்நிலை பகுதிகளை மாவட்ட கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 14-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.