மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்டு மகேந்திரவாடி, புதுக்குளம், ராயபுரம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அங்கு மகேந்திரவாடியை சேர்ந்த செல்வி என்பவர் பணித்தள பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவரை மாற்றிவிட்டு பணித்தள பொறுப்பாளராக ஆண் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறியும், அவரை மாற்றம் செய்யக்கோரியும் மகேந்திரவாடி பஞ்சாயத்தை சேர்ந்த பெண்கள் நேற்று மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம், கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.