பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம், பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை,
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 45). இவர், தேர்வாய்கண்டிகை பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி, இவரை விட்டு பிரிந்து மகன், மகளுடன் தனியாக சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக வசித்து வந்த சுந்தர்ராஜன், 6-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் ஆசிரியர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது அவர், மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சுந்தர்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.