வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் படுகொலை

சிவகிரி, சங்கரன்கோவில் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-24 22:00 GMT
சிவகிரி:
நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா வாகைக்குளம் நாடார் மேல தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரியப்பன் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் அப்பகுதியைச் சேர்ந்த பேபி ரம்யாவை (25) கடந்த சில ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு உதயா (6), அஜார் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பேபி ரம்யா அடிக்கடி செல்போனில் பேசுவதாக கூறி, அவரது நடத்தையில் மாரியப்பன் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். இதனால் பேபி ரம்யா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து, 2 குழந்தைகளுடன் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் பாரதி நகரில் உள்ள வாடகை வீட்டில் குடிேயறினார்.

பின்னர் மாரியப்பன் அடிக்கடி மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கூறி அழைத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேபி ரம்யா குழந்தைகளுடன் கணவருடன் சென்றார். பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் கணவரிடம் இருந்து பிரிந்து பேபி ரம்யா குழந்தைகளுடன் தேவிபட்டணத்துக்கு வந்து விட்டார்.
நேற்று காலையில் மாரியப்பன் மீண்டும் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த பேபி ரம்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்த குழந்தைகள் அலறி துடித்தனர். அவர்களது சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்து மாரியப்பன் தப்பியோட முயன்றார். உடனே அவரை மடக்கி பிடித்த ெபாதுமக்கள், இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த பேபி ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

சங்கரன்கோவில் அருகே வெள்ளகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். இவருக்கு 2 மனைவிகள். 2-வது மனைவி சுப்புலட்சுமி என்ற சுப்புத்தாய் (55). இவருக்கு குழந்தை கிடையாது.

இந்த நிலையில் சேவியர் பாண்டியன் சில சொத்துகளை சுப்புத்தாய் பெயரில் எழுதி வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  சேவியர் பாண்டியன் இறந்து விட்டார். இதனால் சொத்து பிரச்சினை தொடர்பாக முதல் மனைவியின் மகனான ஆரோக்கியராஜிக்கும் (40), சுப்புத்தாய்க்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

சுப்புத்தாய் தனது சொந்த ஊரான ஆண்டார்குளத்தில் தன்னுடைய தங்கை அந்ேதாணியம்மாளின் குடும்பத்தினருடன் சேர்ந்து விவசாயமும், பன்றி பண்ணை தொழிலும் நடத்தி வந்தார். நேற்று மதியம் சுப்புத்தாய், பன்றி பண்ணைக்கு தேவையான தீவன பொருட்களை வாங்குவதற்காக ஆண்டார்குளத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வாடகை லோடு ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.

சங்கரன்கோவில் அருகே நகரம் பகுதியில் டீக்குடிப்பதற்காக லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் சென்றார். அப்போது சுப்புத்தாய் மட்டும் லோடு ஆட்டோவில் இருந்தார். இதனை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த ஆரோக்கியராஜ் திடீரென்று கத்தியால் சுப்புத்தாயை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுப்புத்தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விரைந்து சென்று, சுப்புத்தாயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆரோக்கியராஜை வலைவீசி தேடி வருகின்றனர். சிவகிரி, சங்கரன்கோவிலில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்