மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது
கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,900 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குன்னத்தூர்
கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக டிராவல்ஸ் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,900 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுபாட்டில்கள் கடத்தல்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 அட்டை பெட்டியுடன் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த அட்டைப்பெட்டியில் கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மோட்டார்சைக்கிளில் வந்தவரை போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவருடைய பெயர் ஜெய்சன் (வயது 38) என்றும், குன்னத்தூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் குன்னத்தூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருப்பதாகவும் கூறினார்.
உடனே மதுவிலக்குகூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் மசுதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், துரைசாமி ஆகியோர் குன்னத்தூர்-ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 6,900 மது பாட்டில்கள் அட்டை பெட்டியில் அடுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
இது தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் ஜெய்சன், இவரிடம் டிரைவராக வேலை பார்த்த ஈரோடு மாவட்டம் கெட்டிசெவியூரை சேர்ந்த கருப்புசாமி (22), கரூரை சேர்ந்த பாலசிங் (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ஜெய்சன் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆகும்.