புகையிலை புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வெங்காய பயிர்களை தாக்கும் புகையிலை புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் வழிகாட்டியுள்ளார்.

Update: 2021-06-24 21:26 GMT
போடிப்பட்டி
வெங்காய பயிர்களை தாக்கும் புகையிலை புழுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் வழிகாட்டியுள்ளார்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் சின்ன வெங்காயப் பயிர்களில் ஸ்போடாப்டிரா லிட்டூரா எனப்படும் புகையிலை புழுக்களின் தாக்குதல் தென்படுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
புகையிலை புழுக்களின் தாய் அந்துப்பூச்சிகளின் முன் இறக்கை செம்பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிறக்கோடுகளையும் கொண்டிருக்கும். அதன் பின் இறக்கை வெள்ளை நிறமாகவும் பழுப்பு நிறத்திட்டுகளையும் கொண்டிருக்கும். இதன் முட்டைகள் குவியல் குவியலாய் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதிலிருந்து வரும் புழுக்கள் கரும்பழுப்பு நிறத்தில், உடலின் மேற்பரப்பில் புள்ளிகளுடன் காணப்படும். இவை வெங்காய தாள்களைத்தின்று அழிக்கும். இவற்றை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
இனக்கவர்ச்சி பொறி
அதன்படி ஆழமாக உழவு செய்து கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேலும் வயல் வரப்புகளில் கவர்ச்சி பயிராக ஆமணக்கு பயிரிட்டு இதனை கட்டுப்படுத்தலாம். அத்துடன் ஏக்கருக்கு 4 இனக் கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இந்த இனக்கவர்ச்சி பொறிகளை 20 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியமாகும். இதுதவிர நீல நிற துணி அல்லது பாலிதீன் பேப்பரை வயலில் விரித்து வைத்தால் இரவு நேரங்களில் புழுக்கள் அவற்றின் அடியில் போய் தங்கி விடும். காலையில் அவற்றை எடுத்து அழித்து விடலாம். 
புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு குளோரோபைரிபாஸ் மிலி அல்லது எமாமேக்டின் பென்சோயேட் 5 கிராம் அல்லது ஸ்பைனிட்ரோம் 5 மிலி அல்லது குளோராண்ட்ரானிலிப்ரோல் 5 மிலி பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கைத்தெளிப்பான் மூலம் வெங்காயப் பயிர் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை இதே மருந்தை தெளிக்கலாம்.பொதுவாக மக்காச்சோளம் பயிரிட்ட வயலில் சின்ன வெங்காயம் பயிரிடுவதை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு  அவர் கூறினார்.

மேலும் செய்திகள்