ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல்; முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி போராட்டம்

முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-24 21:04 GMT
ஈரோடு
முறையான அறிவிப்பு இல்லை எனக்கூறி ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுழற்சி முறையில்
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. தடுப்பூசி போடும் பணியை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் நேற்று முதல் சுழற்சி முறையில் முகாம் அமைத்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது சுழற்சி முறையில் 20 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சாலைமறியல்
இந்த நிலையில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடுவது குறித்த முறையான தகவல் இல்லாததால் வழக்கம் போல், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போட நேற்று காலை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போடும் மையத்தின் முன்பு நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசிகள் போடப்படாது என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறியதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென்று ஈரோடு-சத்தி ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறையான அறிவிப்பு இல்லை
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'வழக்கம் போல் தடுப்பூசி போடுவார்கள் என்று நம்பித்தான் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தோம்.
ஆனால் தற்போது தடுப்பூசி போடப்படாது என்று கூறுகின்றனர். இதை முன்கூட்டியே சொல்லி இருக்கலாம். அல்லது போர்டு வைத்திருக்கலாம். முறையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர்' என குற்றம் சாட்டினர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்