ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர்
ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
ரேஷன் கடைகள்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கையும் அமல்படுத்தினார். இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, சில தளர்வுகள் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஊரடங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சில குறிப்பிட்ட தளவர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ தேவைகளுக்கு வெளியே வருகிறவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா முழு ஊரடங்கின் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுபோல் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
குவிந்த பொதுமக்கள்
அதன்படி முதற்கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு விட்டது. இதன் பின்னர் 2-வது கட்டமாக ரூ.2 ஆயிரமும், 14 வகையான மளிகை பொருட்களும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிவாரண பொருட்கள் மற்றும் பணத்தை விரைவாக வழங்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த பணிகள் மேலும் வேகமெடுத்துள்ளது. திருப்பூர் மாநகரில் முருகம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இவற்றை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி சென்றனர்.