கூடங்குளத்தில் போலியாக இயங்கிய மருத்துவமனைக்கு ‘சீல்’
கூடங்குளத்தில் போலியாக இயங்கிய மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கூடங்குளம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலைய மெயின் கேட்டின் எதிர்ப்புறம் கிழக்குப்பகுதியில் தனியார் முதலுதவி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த மையத்தில் நோயாளிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு களக்காடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் ஜெபஸ்டின் புகார் மனு அளித்து இருந்தார்.
இந்த நிலையில், அந்த முதலுதவி மையத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ராமநாதன், தாசில்தார் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு முதலுதவி மட்டுமின்றி சட்டத்துக்கு புறம்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலியாக மருத்துவமனை போல் இயங்கிய அந்த முதலுதவி மையத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.