நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை-ஒன்றிய குழு தலைவர் உறுதி
ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றினால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் உறுதி அளித்து உள்ளார்.
திருப்பத்தூர்,
-
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியக்குழுத்தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். ஆணையாளர் தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜஹாங்கீர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழுத்துணை தலைவர் மீனாள்வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, சரவணன், ராமசாமி, கலைமாமணி, பழனியப்பன், ஜெயபாரதி, கலைமகள், பாக்கியலெட்சுமி, சகாதேவன், ராமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தீர்மானங்களை மண்டல ஏ.பி.டி.ஓ., முகமது அப்துல்லா வாசித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல் கூறியதாவது:-
திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கே.ஆர்.பெரியகருப்பனுக்கு ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பொறுப்பு கொடுத்த முதல்-அமைச்சருக்கும், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களின் அடிப்படை தேவைகளை 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி கிராம நிர்வாக அலுவலர்களிடம் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சித் தலைவர்கள் ஒத்துழைப்புடன் நாம் பணிகள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதத்தில், ஒன்றியக்கவுன்சிலர் ராமசாமி: வேலங்குடி பகுதியில் நீரேற்றும் குழாயில் குடிநீர் இணைப்பு கொடுப்பதை தடுக்கவும், மனையிடம் இல்லாதவர்களுக்கு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்கவும், வனத்துறை அனுமதியில்லாமல் உள்ள மகிபாலன்பட்டி, - வேலங்குடி, கொண்ணத்தான்பட்டி சாலைக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஒன்றியக்கவுன்சிலர் சகாதேவன் கூறும் போது, ஒன்றிய கவுன்சிலர்கள் பணி நிறைவேற்றும் போது சம்பந்தப்பட்ட ஊராட்சித்தலைவர்கள் ஒத்துழைப்பில்லை. ஒன்றியக்கவுன்சிலர்களுக்கு அலுவலகம் ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.