ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அதிகரிப்பு
நெல்லை வழியாக செல்லும் ரெயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்பதிவும் உயர்ந்து வருகிறது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலையொட்டி கடந்த ஆண்டு முதல், போக்குவரத்து என்பது சிரமமாகி விட்டது. பஸ் போக்குவரத்து அவ்வப்போது இயக்கப்பட்டும், நிறுத்தப்பட்டும் வந்தது. ரெயில் போக்குவரத்தை பொறுத்தவரை 2 ஆண்டுகளாக பாசஞ்சர் ரெயில் அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது. ஒருசில பாசஞ்சர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் கொரோனா பரவல் அதிகரித்தபோது, பயணிகள் வருகை குறைந்து விட்டதால் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்களும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், நிறுத்தப்பட்டிருந்த பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ரெயிலில் பயணிக்க பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே ரெயில்கள் தற்போது பயணிகள் நிரம்பியவாறு செல்கிறது. மேலும் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லை வழியாக இயக்கப்படும் ரெயில்களிலும் தினமும் முன்பதிவு காத்திருப்போர் எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளது.
நாகர்கோவில் -கோவைக்கு காலை மற்றும் இரவில் இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. நாகர்கோவில் -பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் நெல்லை வழியாக செல்லும் ரெயில்களில் இடம்பிடிக்க தற்போது முன்பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே முன்பதிவு அதிகரித்து உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்காக நேற்று ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு ரெயிலில் பயணிக்க முன்பதிவு செய்தனர்.