சாலை அமைக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

எடப்பாடி அருகே சாலை அமைக்கக்கோரி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-24 20:40 GMT
எடப்பாடி
எடப்பாடி அருகே சாலை அமைக்கக்கோரி பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபாதை
எடப்பாடி அருகே உள்ள கோரணம்பட்டி கிராமம் மல்லந்தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நடைபாதையோரங்களில் ஆங்காங்கே கிணறுகள் இருப்பதால் மழை காலங்களில் மண் சரிவுகளால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.
போராட்டம்
மேலும் முதியோர், கர்ப்பிணிகள் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட சாலை வசதி இல்லாததால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் அல்லது தூக்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும். இது மட்டுமின்றி குடிநீர் வசதியும் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் சாலை அமைக்கக்கோரி அந்த பகுதிைய சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மல்லந்தோட்டம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலை வசதி மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டு்ம் என்று பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
நிவாரண நிதி
முன்னதாக அதே பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 15-க்கும் மேற்பட்டோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த மொத்தம் ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக வங்கிக்கு சென்று அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்