ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கம்; தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக மாநில பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2021-06-24 20:39 GMT
தாளவாடி
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக மாநில பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 
மலைப்பகுதி
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைப்பகுதி.
இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் தமிழக கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாரதிபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திகட்டை பகுதியில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது.
 இ-பதிவு
 இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பஸ்கள் கடந்த திங்கட்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி அருகே உள்ள மாநில எல்லை பகுதியான பாரதிபுரம் வரை கர்நாடக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினந்தோறும் கர்நாடகாவில் இருந்து தாளவாடி பகுதிக்கும் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும் எந்த ஒரு இ-பதிவும் இல்லாமல் பொதுமக்கள் சென்று வருகின்றனர். 
பொதுமக்கள் அச்சம்
இதனால் தாளவாடியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
எனவே மாவட்ட நிர்வாகம்     தமிழகத்தில்      ஊரடங்கு      முடியும் வரை மாநில எல்லையில் சோதனையை கடுமையாக்க வேண்டும் எனவும்,   பஸ்சில் பயணம் செய்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அந்தபகுதி மக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்