நெல்லையில் நிலத்தரகர் அடித்துக்கொலை; போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது

நெல்லையில் நிலத்தரகர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-24 20:08 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் அருள் விசுவாசம் (வயது 48).  பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. 'பி' காலனியில் வசித்து வந்த இவர் நிலத்தரகர் ஆவார். இவருடைய நண்பர்கள் பாளையங்கோட்டை எம்.எல். பிள்ளை நகரை சேர்ந்த ஏசுபால் (40), என்.ஜி.ஓ. பி. காலனியை சேர்ந்த மணிகண்டன் (42) மற்றும் மரிய சிலுவை (44). இவர்களும் ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளை அருள் விசுவாசத்துடன் சேர்ந்து செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி அருள் விசுவாசத்தை மதுகுடிக்க நண்பர்கள் அழைத்தனர். அவர்கள் பெருமாள்புரம் பகுதியில் மதுகுடித்தனர். நேற்று முன்தினம் காலை அருள் விசுவாசத்தை அவரது வீட்டின் முன்பு நண்பர்கள் வாகனத்தில் அழைத்து வந்து இறக்கிவிட்டு சென்றனர். 

அப்போது அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது. இதைக்கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அருள் விசுவாசம் இரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அருள் விசுவாசத்தின் மனைவி மேரி சுகந்தி பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. சம்பவத்தன்று இரவு அருள் விசுவாசம் தனது நண்பர்களான ஏசுபால், மணிகண்டன், மரிய சிலுவை ஆகியோருடன் மதுகுடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவர்களுக்குள் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அருள் விசுவாசத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் பயந்து போன அவர்கள் ஒரு வாகனத்தில் அருள் விசுவாசத்தை ஏற்றிக் கொண்டு, அவரது வீட்டின் முன்பு இறக்கிவிட்டனர். பின்னர் நண்பர்கள் 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். எனவே, 3 பேரும் அடித்ததில் அவர் இறந்துள்ளார். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த பயங்கர கொலை குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஏசுபால், மணிகண்டன், மரிய சிலுவை ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இதில் மணிகண்டன் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பழவூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு இருப்பதால், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் நிலத்தரகர் கொலையில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்