கும்பகோணம் பகுதிகளில் பருத்தி செடிகளில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

கும்பகோணம் பகுதியில் பருத்தி செடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-06-24 19:47 GMT
கும்பகோணம்:-

கும்பகோணம் பகுதியில் பருத்தி செடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

பருத்தி பயிர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரிட்டுள்ளனர். பருத்தி பயிரின் பருவகாலம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஆகும். அதன் பின் காய் விட்டு பஞ்சு வெடித்து வெளியேறும் காலம் தொடங்கி விடும். பருத்தி பயிரில் பருவநிலை மாற்றம் காரணமாக வெள்ளை பூஞ்சை, மஞ்சள் தேமல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் பருத்தி செடிக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சி, மருந்து தெளித்து நோய்களில் இருந்து பயிரை காப்பாற்றி வருகின்றனர். ஆனாலும் அதையும் மீறி பருத்தி பயிர்களில் நோய்கள் ஏற்பட்டு வருகிறது. கும்பகோணம் பகுதிகளில் பருத்தி பயிர்களில் தற்போது மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது.

மஞ்சள் தேமல் நோய் அறிகுறிகள்

மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பயிரின் இளம் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி, படிப்படியாக இலை முழுவதும் பரவி ஒளிரும் மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே பச்சைப் புள்ளிகளுடன் மஞ்சள் நிற தேமல் படலங்களாக மாறிவிடும். இந்த நோய் தாக்குதல் அதிகமாகும்போது இலைகள் உருமாறி தோற்றமளிக்கும். இந்த நோயின் பாதிப்புக்குட்பட்ட பயிர் முதிர்ச்சியடைய காலதாமதமாகும். மேலும் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்களை கொண்டிருக்கும். காய்கள் சிறிய அளவிலும் உருமாறியும் காணப்படும். மஞ்சள் தேமல் நோயானது பூக்கும் முன் செடிகளை தாக்கினால், காய் பிடிக்காமல் போகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

வெள்ளை ஈக்கள்

இந்த நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ மூலம் பரவுகிறது. கோடைகாலத்தில் வெள்ளை ஈக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதால் இந்நோய் தாக்கம் அதிகமாக தென்படும். நோய் தீவிரமடையும் போது, செடிகளில் ஆணி வேரைத் தவிர மற்ற வேர்கள் அழுகி விடுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலே எளிதில் கையோடு வந்துவிடும். கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், கொற்கை, தேனாம்படுகை, மேலப்பழையாறை, கீழப்பழையாறை, நாதன்கோவில், உடையாளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது பருத்தி செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 
இதுகுறித்து கொற்கை பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-  

கட்டுப்படுத்த நடவடிக்கை

எங்கள் பகுதியில் பல ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து பருத்தி பயிர் நடவு செய்துள்ளோம். தற்போது பருத்தியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்களை கொண்டிருக்கும். சில நேரங்களில் காய்ப்பிடிக்காமலே போய்விடும். பல ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து பருத்தி அறுவடை செய்வதற்கு முன்பே பாதிப்பு ஏற்படுவது வேதனை அளிக்கிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக பருத்தி செடிகளை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்