டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுபாட்டிலுக்குள் குப்பை
டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுபாட்டிலுக்குள் குப்பை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் வசிப்பவர் படையப்பா என்ற செல்வராஜ். இவர் நேற்று காலை தனது நண்பருடன் கயர்லாபாத் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கும், தனது நண்பர்களுக்கும் மதுபாட்டில்கள் வாங்கினார். அதில் திறக்கப்படாத ஒரு பாட்டிலுக்குள் ஏதோ கருப்பாக உருண்டையாக குப்பை போன்று தென்பட்டது. இதுபற்றி செல்வராஜ், டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் சென்று முறையிட்டுள்ளார். அதற்கு அவர், வேறு மதுபாட்டில் வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொரோனா காலத்தில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் பொதுமக்கள் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அரசு டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுபாட்டிலில் குப்பை கிடந்தது, மதுப்பிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.